×

கொலை மற்றும் கொள்ளை நடந்ததாக கூறப்படும் கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

சென்னை: கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் அன்றைக்கு சசிகலா, டி.டி.வி.தினகரனை எதிர்த்து தர்மயுத்தம செய்தார். இப்போது டி.டி.வி.தினகரனுடன் இன்று கூட்டணி வைத்துள்ளார். ஓபிஎஸ் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி என்று தமிழ்நாடு மக்களும், அதிமுக தொண்டர்களும் உணர்ந்துள்ளனர். இதுவரை மறைமுகமாக சந்தித்து வந்த இவர்கள் தற்போது பொதுவெளியில் சந்தித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கொடநாடு கொலை, கொள்ளையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார்.

கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தபோது, குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை வழக்கு போன்ற கடுமையான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். சட்டமன்றத்தில் கொடநாடு பிரச்னை பற்றி முதல்வர் பேசும்போது, அன்றைக்கு அதை எதிர்த்து மறியல் போராட்டம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தலைமையில்தான் நடந்தது. இன்றைக்கு ஓபிஎஸ்சும், டி.டி.வி.யும் கொடநாடு பற்றி பேசுவது விந்தையாக உள்ளது.

ஜெயலலிதா வசித்த வீடு கோயில் போன்றது என்று ஓபிஎஸ் இன்று பேசியுள்ளார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியது உண்மைதான். கொடநாடு பங்களா யாருக்கு சொந்தம் என்பது ஓபிஎஸ்சுக்கு நன்றாக தெரியும். கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல. அந்த பங்களா தனியாருக்கு சொந்தமானது. கொடநாடு பங்களாவை ஜெயலலிதா ஒரு முகாம் அலுவலகமாக பயன்படுத்தினார். ஆனால், அந்த வீடு அவருக்கு சொந்தமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்று சேரவே நாடகம்
ஜெயலலிதா பற்றி பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த தகுதியும் இல்லை. இதை உணர்ந்ததால்தான் அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். பதவி வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நபர் உலகத்திலேயே ஒருவர் உண்டு என்றால் அவர்தான் ஓபிஎஸ். உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடுத்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் உறுதிபடுத்தியுள்ளது. அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ், டிடிவி பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ்சும், டிடிவியும் சேர வேண்டும் என்பதற்காக அவர்களாக ஏற்படுத்திய நாடகம்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

The post கொலை மற்றும் கொள்ளை நடந்ததாக கூறப்படும் கொடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கே சொந்தம் அல்ல: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Koda Nadu bungalow ,AIADMK ,-minister ,Jayakumar ,CHENNAI ,Former ,Minister ,Kodanadu bungalow ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...